×

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் நாடு முழுவதும் 4ஜி சேவை ஆகஸ்டில் தொடங்கப்படும்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல், ஐடி நிறுவனமான டிசிஎஸ் மற்றும் அரசின் தொலைதொடர்பு ஆராய்ச்சி நிறுவனமான சி-டாட் மூலம், உள்நாட்டிலேயே உருவாக்கிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4ஜி சேவையை கொண்டு வருகிறது. தற்சார்பு இந்தியாவை நோக்கிய முயற்சியாக, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 4ஜி சேவை பஞ்சாப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிஎஸ்என்எல் மூத்த அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘கடந்த ஆண்டு ஜூலையில் பஞ்சாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 4ஜி சேவை சிறப்பாக செயல்படுகிறது. வினாடிக்கு 40 முதல் 45 மெகாபிட் உச்ச வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக இதுபோன்ற தொழில்நுட்பத்தின் வெற்றியை நிரூபிக்க 12 மாதங்கள் தேவைப்படும். ஆனால் 10 மாதத்திற்குள் வெற்றி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வரும் ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கப்படும்’’ என்றார். நாடு முழுவதும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்காக 1.12 லட்சம் டவர்களை அமைக்கும் பணியில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது. 4ஜி சேவைக்காக மட்டும் 9,000க்கும் மேற்பட்ட புதிய டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.
எனவே, 4ஜி சேவையை பெற பழைய சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் புதிய 4ஜி சிம்மை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் நாடு முழுவதும் 4ஜி சேவை ஆகஸ்டில் தொடங்கப்படும்: பிஎஸ்என்எல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nationwide ,BSNL ,NEW DELHI ,Union ,TCS ,C-DOT ,India ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது